பரமக்குடி ஒன்றியத்தில் பொதுமக்களை சந்தித்து எம்.எல்.ஏ. குறைகள் கேட்டார்
பரமக்குடி யூனியன் பகுதியில் சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பரமக்குடி,
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தர் நகர், உரப்புளி, கள்ளிக்கோட்டை, நென்மேனி, உலகநாதபுரம், வேந்தோணி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ஒவ்வொரு கிராமத்திலும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். சில கிராமங்களில் சரியான நேரத்தில் பஸ்கள் வருவதில்லை எனவும், நடந்து தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று தான் பஸ் ஏறுகிறோம் என்றும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லை எனவும் புகார் கூறினர்.
உலகநாதபுரத்தில் பல ஆண்டுகளாக குடிநீரே வராததால் அந்த கிராம மக்கள் காவிரி குடிநீர் குழாயில் கிணறு போல் அமைத்து குடிநீர் எடுத்து வருகின்றனர். அதனை பார்வையிட்ட சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. கூடிய விரைவில் மினரல் வாட்டர் தொட்டி அமைத்து தருவதாக உறுதி அளித்தார். பின்பு அவர் கூறியதாவது:– என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளீர்கள். அதற்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். தொகுதி மக்களின் குறைகள் அனைத்தையும் முதல்–அமைச்சரிடமும், சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் கூறி நிவர்த்தி செய்வேன். மக்கள் நலனே எனது சேவை என கருதி பணியாற்றுவேன். இவ்வாறு கூறினார். அவரை கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் திரண்டு வரவேற்று பொன்னாடைகள் அணிவித்தனர். அவருடன் மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தங்கவேல், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், கூட்டுறவு சங்க தலைவர் நாகேந்திரன், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் தேவராஜ், நகர் இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கெண்டனர்.