முத்தமிழ் கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கு விருது 15–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுரை


முத்தமிழ் கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கு விருது 15–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுரை
x
தினத்தந்தி 6 Jun 2019 3:45 AM IST (Updated: 6 Jun 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெற வருகிற 15–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், அவற்றை பாதுகாக்கும் நோக்கத்தில் மாவட்ட கலை மன்றங்களின வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப் புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி 2018–19–ம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் சிவகங்கை மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக விருதுகள் வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது. இதில் 18 வயதும், அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 முதல் 60 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 61 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்பட உள்ளது.

எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச் சிலம்பாட்டம், சிலம்பாட்டம்(வீரக்கலை) மற்றும் வில்லிசை ஆகிய செவ்வியல் கலைகள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகையான முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதில் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்ற விருதுகளை பெற்ற கலைஞர்கள் இந்த விருதை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. எனவே தகுதியுடைய கலைஞர்கள் இந்த விருதுகளை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச்சான்று, முகவரிச் சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் வருகிற 15–ந்தேதிக்குள் மதுரையில் உள்ள உதவி இயக்குனர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story