கிராம தரிசனம் திட்டத்தை நாடகம் என்பதா? பா.ஜனதாவுக்கு குமாரசாமி கண்டனம்


கிராம தரிசனம் திட்டத்தை நாடகம் என்பதா? பா.ஜனதாவுக்கு குமாரசாமி கண்டனம்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:16 AM IST (Updated: 6 Jun 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரியின் கிராம தரிசனம் திட்டத்தை பா.ஜனதா நாடகம் என்று விமர்சித்து இருப்பதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கிராம தரிசன திட்டத்தை வருகிற 21-ந் தேதி தொடங்குவதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

கிராம தரிசனம்

கிராம தரிசனம் திட்டத்தின்படி முதல்-மந்திரி கிராமத்தில் தங்கி இருந்து கிராம மக்களின் வாழ்க்கை சூழல், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நேரில் அறிந்து நிவர்த்தி செய்வதாகும். முதல்-மந்திரி கிராமத்தில் தங்கி அங்கு நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

குமாரசாமியின் இந்த திட்டத்தை பா.ஜனதா விமர்சித்துள்ளது. இது ஒரு நாடகம் என்று அக்கட்சி குறை கூறியுள்ளது. இதற்கு குமாரசாமி பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கிராம தரிசனம் என்பது மக்களின் அன்பை பெறுவதற்காக அல்ல. இதை திட்டமிட்டு தொடங்கவில்லை. நான் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது இது திடீரென உருவானது. கிராம தரிசனம் என்ற பெயரை உருவாக்கியதே ஊடகங்கள் தான். ஆனால் இந்த திட்டத்தின்போது மக்கள் காட்டிய அன்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இந்த கிராம தரிசனம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், அங்குள்ள உண்மை நிலையை அறிவதற்கும் உதவியது.

சாராய விற்பனைக்கு தடை

அரசு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கிராம மக்களிடம் இருந்து பல்வேறு ஆலோசனைகள் வந்தன. இந்த கிராம தரிசன திட்டத்தால் சாராய விற்பனைக்கு தடை, லாட்டரிக்கு தடை, விவசாய கடன் தள்ளுபடி, ஆயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளிகளை தொடங்கியது, 500-க்கும் அதிகமான பி.யூ.கல்லூரிகள் தொடங்கப்பட்டது.

நான் பதவியை விட்டு விலகிய பிறகு சுவர்ண கிராம திட்டத்தை தொடங்கினர். ஆனால் அந்த திட்டம் சரியாக செயல்படவில்லை. கிராம தரிசனத்தின் முக்கிய நோக்கம், ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை அறிவது தான். அரசின் திட்டங்களை மக்களை சென்றடைந்ததா, மக்களின் கருத்துகள் என்ன என்பதை அறிய உதவும் மகத்தான திட்டம் ஆகும்.

மிகுந்த வேதனை

திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் மட்டுமே அது மக்களை சென்றடையாது. கிராம தரிசனம் போன்ற திட்டங்கள் மூலம் தான் அது மக்களை முழுமையாக சென்றடையும். எச்.ஐ.வி. பாதித்த வீடு ஒன்றில் நான் தங்கியதால், அந்த குடும்பம் ஊரைவிட்டே வெளியேறிவிட்டது என்று செய்திகள் வந்துள்ளன. இது உண்மையிலேயே துரதிர்ஷ்டம்.

எய்ட்ஸ் நோய் பற்றி மக்களிடையே உள்ள தவறான கருத்துகளை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அந்த வீட்டில் தங்கினேன். ஆனால் இந்த சமூகம் இதை எதிர்மறையாக பார்த்துவிட்டது. இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. தனிப்பட்ட முறையிலும் நான் அந்த குடும்பத்திற்கு உதவினேன். அதுபற்றி இங்கு விவரமாக சொல்ல விரும்பவில்லை.

குறைகளை போக்க...

அந்த குடும்பத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்வேன். நான் திட்டமிட்டுள்ள கிராம தரிசன நிகழ்ச்சியின்போது, சட்டத்திற்கு உட்பட்டு மக்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பேன்.”

இவ்வாறு அதில் குமாரசாமி குறிப்பிட்டு உள்ளார்.

Next Story