ஹைட்ரோ கார்பன் திட்டம் சுனாமியை விட பயங்கரமானது; திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேச்சு


ஹைட்ரோ கார்பன் திட்டம் சுனாமியை விட பயங்கரமானது; திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேச்சு
x
தினத்தந்தி 6 Jun 2019 4:45 AM IST (Updated: 6 Jun 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டம் சுனாமியை விட பயங்கரமானது என்று திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறினார்.

புதுச்சேரி,

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் புதுவை செகா ஆர்ட்ஸ் கேலரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

1950–ம் ஆண்டுமுதல் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 1984–ம் ஆண்டு மக்கள் வாழும் இடங்களிலேயே எண்ணை கிணறுகளை அமைத்துவிட்டது. பூமிக்கு அடியிலிருந்து எடுப்பதில் 90 சதவீதம் தண்ணீரும், 10 சதவீதம் எரிவாயுவும் இருக்கும். இவ்வாறு எடுக்கும்போது வெற்றிடம் ஏற்படும். அந்த இடத்தில் மேல்மட்டத்தில் உள்ள தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிடும்.

1984–ம் ஆண்டு முதல் தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. தற்போது தமிழகத்தில் 28 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. அதிலும் 20 மாவட்டங்கள் தீவிரமான தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருகின்றன. தற்போதே இந்த நிலை என்றால் இன்னும் 10, 15 ஆண்டுகளில் என்னவாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. ஹைட்ரஜனும், கார்பனும் சேர்ந்த கூட்டு பொருள்தான் ஹைட்ரோ கார்பன். இதில் ஆக்சிஜன் சேர்ந்தவுடன் எரிய ஆரம்பிக்கிறது. நிலத்துக்கு கீழ் இருந்து வரக்கூடிய அனைத்து வகை எண்ணெய், எரிவாயையும் குறிக்கக் கூடிய ஒரு பொதுச்சொல்தான் ஹைட்ரோ கார்பன். மத்திய அரசு கொண்டுவரும் இந்த திட்டம் சுனாமியை விட பயங்கிரமானது. அது நடைமுறைக்கு வந்தால் அழிவில் இருந்து தமிழகம் தப்பிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் அமுதவன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு. அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகம், புதுச்சேரி பகுதிகளை ஒட்டுமொத்தமாக அழிக்கவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணிக்கிறது. இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். புதுச்சேரி, காரைக்காலில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்தில் வேளாங்கண்ணி வரை 5,099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக காவிரிப்படுகை அழியும். இன்னும் 20 ஆண்டுகளில் கடல் மட்டத்தை விட காவிரிப் படுகை தாழ்ந்து போகும். அப்போது கடல் உள்ளே வந்துவிடும். 56 லட்சம் மக்கள் அகதிகளாக மாறி விடுவார்கள். நாம் எந்த மாநிலத்திற்கு அகதிகளாக செல்வது?. காவிரிப் படுகை மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

அதே போல் புதுவையிலும் இதன் ஆபத்தை உணர்ந்து எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி இணைந்து வருகிற ஆகஸ்டு மாதம் மயிலாடுதுறையில் மிகப்பெரிய மாநாடு நடத்த உள்ளோம். காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகம் மற்றும் புதுவை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story