குர்லா டெர்மினசில் ரெயிலில் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு
குர்லா டெர்மினசில் ரெயிலில் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு உண்டானது.
மும்பை,
நவிமும்பை உரண் பகுதியில் உள்ள பாலத்தின் தூண்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு அல் பக்தாதி மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆகியோரை புகழ்ந்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. இது மும்பை மற்றும் நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், மும்பை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு இருக்கையில் காகிதத்தில் பொதிந்து ஒரு மர்மபொருள் வைக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணை
அதில், வயர், பேட்டரி இருந்தது. இதனால் வெடிகுண்டு பீதி உண்டானது. மேலும் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த பொருளை எடுத்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், அது வெடிபொருள் இல்லை என்பது தெரியவந்தது. எனினும் வேறு பெட்டியில் வெடிகுண்டு ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய ரெயில்வே போலீசார் அந்த ரெயில் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
யாரோ மர்மஆசாமி பீதியை உண்டாக்குவதற்காக வைத்து சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story