பேட்டையில் பரபரப்பு: போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளிக்க முயற்சி
பேட்டையில் போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டை,
நெல்லையை அடுத்த பழைய பேட்டை கண்டிகைபேரி பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 33), லாரி டிரைவர். இவர் நேற்று காலையில் மண்எண்ணெய் பாட்டிலுடன் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு வந்தார். அப்போது மாரியப்பன் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்று, மாரியப்பனிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து மாரியப்பனிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது மாரியப்பன் கூறுகையில், தனது ஊரைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்களான ராஜா, சுடலை உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, தன்னை அடிக்கடி கேலி-கிண்டல் செய்ததாகவும், நேற்று முன்தினம் அந்த நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேட்டையில் போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story