மாவட்ட செய்திகள்

தச்சநல்லூரில் நின்று செல்லும்நெல்லை-தென்காசி பஸ்களில் கட்டணம் குறைக்க நடவடிக்கை + "||" + Standing in Thachanallur Steps to reduce fees in Nellai-Tenkasi buses

தச்சநல்லூரில் நின்று செல்லும்நெல்லை-தென்காசி பஸ்களில் கட்டணம் குறைக்க நடவடிக்கை

தச்சநல்லூரில் நின்று செல்லும்நெல்லை-தென்காசி பஸ்களில் கட்டணம் குறைக்க நடவடிக்கை
நெல்லை-தென்காசி பஸ்களில் தச்சநல்லூரில் ஏறும் பயணிகளுக்கு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நெல்லை, 

நெல்லை டவுனில் தெற்கு மவுண்ட் ரோட்டில், மாநகராட்சி புதிய குடிநீர் திட்டத்துக்கான பெரிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி அந்த ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. அந்த வழியாக இயக்கப்பட்டு வந்த நெல்லை -தென்காசி பஸ்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

அதாவது நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் புறவழிச்சாலை ரவுண்டானா, தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக தென்காசிக்கு இயக்கப்படுகிறது. இதனால் கூடுதல் தூரம் பயணம் மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது.

இதையொட்டி கூடுதல் கிலோ மீட்டரை அடிப்படையாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு பஸ் டிக்கெட்டுக்கு தலா ரூ.3 வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதையும் கண்டக்டர்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணத்தை மாற்றி, மாற்றி வசூலித்தனர். இதை அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் சரியாக ரூ.3 மட்டுமே உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திப்பு பகுதி பயணிகளுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதாவது சந்திப்பு பகுதிக்கு வந்து செல்லும் பயணிகள் தென்காசி பஸ்சில் ஏறுவதற்காக சந்திப்பில் இருந்து ஷேர் ஆட்டோ அல்லது டவுன் பஸ் மூலம் தச்சநல்லூர் சந்தி மறித்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்துக்கு செல்கிறார்கள். அந்த வழியாக தென்காசி நோக்கி செல்லும் பஸ்களில் ஏறி பயணம் செய்கிறார்கள். இவ்வாறு தச்சநல்லூரில் நின்று செல்லும் தென்காசி பஸ்களில் ஏறி பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏறும் பயணிகளுக்கு உரிய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதாவது புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு முன்பு ரூ.51 ஆக இருந்தது. தற்போது ரூ.3 சேர்த்து ரூ.54 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதே கட்டணம் தச்சநல்லூரில் ஏறும் பயணிகளிடம் இருந்தும் வசூலிக்கப்படுகிறது. அந்த பயணிகள் சந்திப்பில் இருந்து தென்காசிக்கு செல்லும்போது ரூ.46 கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனவே தச்சநல்லூர் பஸ் நிறுத்தத்தை சந்திப்பு பஸ் நிலைய அடிப்படையாக கருதி ரூ.46 மற்றும் ரூ.3 சேர்த்து ரூ.49 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கண்டக்டர்களிடம் பயணிகள் வலியுறுத்தினர். இதேபோல் சீதபற்பநல்லூர், மாறாந்தை, ஆலங்குளம், அடைக்கலப்பட்டணம், பாவூர்சத்திரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தினந்தோறும் நெல்லை-தென்காசி பஸ்சில் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தச்சநல்லூரில் இருந்து தென்காசி பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “போக்குவரத்து மாற்றத்தால் தச்சநல்லூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்காசி பஸ்களில் அதிகமாக பயணிகள் ஏறி பயணம் செய்கிறார்கள். எனவே தச்சநல்லூர் பஸ் நிறுத்தத்தை, பழைய சந்திப்பு பஸ் நிலைய அடிப்படையாக ‘ஸ்டேஜ்’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனடிப்படையில் கட்டணத்தை குறைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இருப்பினும் ‘ஒன் டூ ஒன்’ பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்” என்றார்.