ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்


ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:00 AM IST (Updated: 6 Jun 2019 9:55 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தமிழக அரசால் நெல்லை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் 72 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதில் பள்ளி மாணவர்களுக்கு 38 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு 26 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு 4 விடுதிகளும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஒரு விடுதியும் செயல்பட்டு வருகிறது.

பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும் படிக்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளும் இந்த விடுதிகளில் சேர தகுதியானவர்கள் ஆவார்கள். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 75 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் 20 சதவீதமும், இதர வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படுகிறார்கள்.

ஆதி திராவிடர் நல விடுதிகளில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி, வினா-வங்கி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

மதிப்பெண்கள் அடிப்படையில் விடுதிகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கும் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும்.

தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மாணவர்களின் வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் கட்டாயம் இணைக்க வேண்டும்.பள்ளி விடுதிகளை பொறுத்த வரையில் வருகிற 20-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்த வரையில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதிக்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Next Story