விழுப்புரத்தில் உள்ள பிரபல நகை கடையில் மோசடி; பெண் உள்பட 2 பேர் கைது
விழுப்புரத்தில் உள்ள பிரபல நகை கடையில் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் பிரபல நகை கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த மாதம் மதுரை கணக்கன்குப்பம் நேதாஜி நகரை சேர்ந்த அமாவாசை மகன் தவமணி (வயது 31), மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ராஜா மனைவி மாரியம்மாள் (60) ஆகியோர் சென்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்களிடம் இருந்த தங்க நகைகளை மாற்றி அதற்கு பதிலாக புது நகைகளை வாங்கிச்சென்றுள்ளனர். பின்னர் கடை ஊழியர்கள், அந்த நகைகளை பரிசோதித்து பார்த்ததில், மதிப்பு குறைந்த பழைய நகைகளை அவர்கள் இருவரும் முலாம் பூசி கொடுத்து விட்டு புதிய நகைகளை பெற்றுச்சென்றதும், இதன் மூலம் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 578 அளவிற்கு கடைக்கு நஷ்டத்தை ஏற்படுத்திச்சென்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்ததோடு தவமணி, மாரியம்மாள் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அந்த கடைக்கு நகை எடுக்க வந்தபோது அவர்கள் இருவரையும் கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து தவமணி, மாரியம்மாள் ஆகிய இருவரின் மீதும் ‘நம்பிக்கை மோசடி’ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story