மது கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால் பரிசு


மது கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால் பரிசு
x
தினத்தந்தி 7 Jun 2019 4:30 AM IST (Updated: 6 Jun 2019 10:23 PM IST)
t-max-icont-min-icon

மது கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்று ஆட்டோ டிரைவர்களுக்கான கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.

கடலூர்,

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் சாராயம், மது கடத்தல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கடலூர் நகர ஆட்டோ டிரைவர்களை அழைத்து கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜாதா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா முன்னிலை வகித்தார். இதில் போலீஸ் ஏட்டுகள் ஜெஸ்டின் பிரபாகரன், சரவணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் பேசுகையில், கடலூரில் இருந்து புதுச்சேரி எல்லை பகுதி வரை சென்று வரும் ஆட்டோ டிரைவர்கள், உங்கள் ஆட்டோவில் யாரேனும் மது பாட்டில்கள், சாராயத்தை கடத்தி வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யார் தகவல் கொடுத்தாலும், அவர்கள் பற்றிய விவரத்தை ரகசியமாக வைத்திருப்போம். சிறப்பாக தகவல் கொடுத்து மது கடத்தலை தடுக்க உதவினால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டே நேரில் வழங்குவார்.

யாராவது மதுபாட்டில்கள், சாராயம் கடத்தினால் உங்களின் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். நீங்களும் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல நேரிடும். ஆகவே மது பாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.

Next Story