நெல்லிக்குப்பத்தில் 12 ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்


நெல்லிக்குப்பத்தில் 12 ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் 12 ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 12 ரேஷன் கடை மற்றும் மண்ணெண்ணெய் விற்கும் கடை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக சவுந்தர் உள்ளார். இவர், கடந்த மாதம் 28-ந் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், தமிழக அரசு அறிவித்தபடி தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக ரேஷன் கடைகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவரது சுற்றறிக்கைக்கு ஊழியர்கள் யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் இந்த மாதம்(ஜூன்) தொடக்கத்தில் வழங்க வேண்டும். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்திற்கான ஆவணத்தில் கூட்டுறவு சங்க தலைவர் சவுந்தர் கையெழுத்திடவில்லை என்று தெரிகிறது.

இதனால் நெல்லிக்குப்பத்தில் உள்ள 12 ரேஷன் கடைகடையும் அடைத்து ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இது பற்றி அறிந்ததும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு ஊழியர்கள், நாங்கள் சரியான நேரத்திற்கு கடைகளை திறந்து வருகிறோம். எங்கள் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு செல்வதால் ரேஷன் கடைகளை திறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்க தலைவர் சவுந்தர் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

Next Story