ஆரணியில் இருந்து சென்னைக்கு அனுப்பிய பாலில் அதிக அளவு தண்ணீர் கலந்ததால் திருப்பி அனுப்பப்பட்டது
ஆரணியில் இருந்து சென்னைக்கு அனுப்பிய பாலில் அதிக அளவு தண்ணீர் கலந்திருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவில் ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கம் மூலம் ஆரணி சுற்று வட்டார பகுதிகளான வடுகசாத்து, இரும்பேடு, மலையாம்பட்டு, காமக்கூர், சேவூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பால் நாள் ஒன்றுக்கு சுமார் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு 5,500 லிட்டர் பால் குளிரூட்டப்பட்டு லாரி மூலம் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு 5,500 லிட்டர் பால் அனுப்பப்பட்டதாகவும், அதில் அதிகளவு தண்ணீர் கலந்து தரமற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த பாலை ஆரணி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. அப்போது பிரச்சினை வெளிவராமல் இருக்க அந்த பாலை ஆரணி கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியில் ஊற்றி அழித்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக சென்னை ஆவின் நிறுவனம் தண்ணீர் கலந்த பால் அனுப்பியதாக ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை யார் கட்டுவது என்ற நிலையில் ஆரணி நகர காவல் நிலையத்தில் பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கடந்த 2-ந் தேதி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார், கூட்டுறவு சங்க செயலாளர், இரவு பாதுகாவலர் உள்பட 3 பேரை விசாரித்தனர். இதனையடுத்து புகார் கொடுத்த கூட்டுறவு சங்க தலைவர், அவர்கள் மீது சங்க ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி புகாரை வாபஸ் பெற்றார்.
இந்த சம்பவம் ஆரணி நகரிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story