பிதிர்காட்டில் இருந்து கேரளாவுக்கு விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்
பிதிர்காட்டில் இருந்து கேரளாவுக்கு விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. அவற்றை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்டது பிதிர்காடு. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் விலை உயர்ந்த 10 குன்னி வாகை மரங்களும், 2 சடச்சி மரங்களும் மற்றும் முக்கட்டி பகுதியில் 7 குன்னி வாகை மரங்களும் கள்ளத்தனமாக வெட்டி கேரளாவுக்கு கடத்தப்பட்டன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது சில மரங்கள் வெட்டி கடத்துவதற்கு தயாராக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான மரங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலர் அசோக், கிராம உதவியாளர் குமார் ஆகியோருடன் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசாரின் உதவியுடன் கடத்தி வரப்பட்ட மரக்கட்டைகளை தேடும் பணியில் பந்தலூர் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் கடத்தி வரப்பட்ட 17 மரக்கட்டைகளும், சீராள் மாவேலி நகரில் 13 மரக்கட்டைகளும் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மரக்கட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பபட்ட மரக்கட்டைகளை பந்தலூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறையினர் எடுத்து வருகின்றனர். கேரள எல்லையில் சோதனைச்சாவடிகளில் இருந்தும் மரக்கட்டைகள் கடத்தல் தொடர்வது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story