2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: முதிர்வுத்தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமர்ப்பிக்கலாம் கலெக்டர் ராஜாமணி தகவல்


2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: முதிர்வுத்தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமர்ப்பிக்கலாம் கலெக்டர் ராஜாமணி தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:00 AM IST (Updated: 7 Jun 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

கோவை,

2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருந்தால் அவர்கள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வைப்புத்தொகை செய்யப்படும். அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும், முதிர்வுத்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள்தான் இருக்க வேண்டும். 2-வது பெண் குழந்தை பிறந்து 3 வருடத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு ஆண் வாரிசு இருக்கக்கூடாது.

2 பெண் குழந்தைகளின் பிறந்தநாள் சான்றிதழ், ஆண் வாரிசு இல்லை என்ற சான்றிதழ், அந்த குழந்தைகளின் தாய்க்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரத்துக்கும் மேல் இருக்கக்கூடாது.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு வைப்புநிதி பத்திரம் வழங்கப்படும். குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு அந்த பத்திரத்தை சமர்ப்பித்தால் முதிர்வுத்தொகை வழங்கப்படும்.

இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல் -அமைச்சரின், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து இருந்தால் வைப்பு நிதி பத்திரத்தை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மகளிர் ஊர்நல அதிகாரி, விரிவாக்க அதிகாரிகளை சந்தித்து கொடுக்கலாம்.

நகர்ப்புற பகுதியில் உள்ளவர்கள் அந்தந்த பகுதிக்கான மண்டல அலுவலகங்களில் உள்ள மகளிர் ஊர்நல அதிகாரி, விரிவாக்க அதிகாரிகளை சந்தித்து ஒப்படைக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பித்த பெண் குழந்தை, 18 வயது பூர்த்தி அடைந்து இருக்கும்போது கண்டிப்பாக 10-ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு படிக்காவிட்டால் அவர்களுக்கு முதிர்வுத்தொகை கிடையாது.

வைப்புநிதி பத்திரத்தை ஒப்படைக்கும்போது கண்டிப்பாக வங்கி கணக்கு புத்தகத்தின் நகலையும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story