ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்


ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்
x
தினத்தந்தி 6 Jun 2019 11:15 PM GMT (Updated: 6 Jun 2019 6:46 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி அனைத்து வட்டங்களிலும் நேற்று தொடங்கியது. இதையடுத்து சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார். மேலும் அவரிடம் பொதுமக்கள் சார்பில் பட்டா மாறுதல், புதிய பட்டா வழங்க கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 90 மனுக்கள் கொடுக்கப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான உத்தரவு மற்றும் ரூ.1.89 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளுக்கான காசோலையை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் ஒவ்வொரு பகுதியிலும் கோட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெறுவார்கள். எனவே பொதுமக்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்தப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்து பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி இயக்குனர்(நில அளவை) யோகராஜா, சிவகங்கை தாசில்தார் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராமங்களின் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதியோர் பென்சன், வருமான சான்றிதழ், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா மாறுதல் உள்பட மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்டு அதில் 6 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் இதில் 5 நபர்களுக்கு பட்டா மாறுதல்கள் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு வருமான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் ராஜா, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாகரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை கேட்டு பலர் மனு கொடுத்தனர். இதில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உடனடியாக உதவி தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காரைக்குடி தாசில்தார் பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story