வறண்ட பூமியை வளமாக்கி திராட்சை சாகுபடியில் சாதிக்கும் விவசாயி


வறண்ட பூமியை வளமாக்கி திராட்சை சாகுபடியில் சாதிக்கும் விவசாயி
x
தினத்தந்தி 7 Jun 2019 3:15 AM IST (Updated: 7 Jun 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

வறண்ட பூமியாக உள்ள சிவகங்கை மாவட்டத்தில் திராட்சை சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதித்துள்ளார்.

காரைக்குடி, 

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் எப்போதும் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் இந்த இரு மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாகவே இருந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தமட்டில் பல்வேறு பகுதியில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சில இடங்களில் குடிதண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் குடிதண்ணீரை தேடி பல கிலோ மீட்டர் தூரம் அலையும் நிலை இருந்து வருகிறது.

எங்கும் வறட்சி காணப்படும் நிலையில் காரைக்குடி அருகே பேயன்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி விடுதலை அரசு(வயது 44), தனது தோட்டத்தில் திராட்சை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

கடந்த 3 ஆண்டாக வறட்சியை சமாளித்து திராட்சை சாகுபடி செய்து வரும் அவர் தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் பி.இ. பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். மண் வளம் கொண்ட பகுதியாகவும், மலைகள் சார்ந்த பகுதியாக உள்ள தேனி, திண்டுக்கல் பகுதியில் மட்டும் விளையும் இந்த திராட்சை செடிகளை காரைக்குடியில் பயிரிட முடிவு செய்தேன்.

இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு எனது தோட்டத்தில் முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் தேனியில் இருந்து திராட்சை செடி குச்சிகளை வாங்கி வந்து இங்கு பயிரிட்டேன். பொதுவாக திராட்சை விவசாயம் செய்வதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலம் வேண்டும்.

இருப்பினும் வறண்ட எனது நிலத்தை வளமாக்கி திராட்சை செடிகளை பயிரிட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அப்போது எதிர்ப்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக இங்கு இந்த திராட்சை செடிகளை பயிரிட்டு வருகிறேன்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் இந்த ஆண்டு திராட்சை பழங்கள் போதிய விளைச்சல் இல்லாமல் போனது. கடந்த 3 ஆண்டுகளாக 6 டன் வரை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறேன். இந்த ஆண்டு கோடை வெயிலால் திராட் சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு விளைந்த திராட்சை பழங்களை வாங்குவதற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்களுக்கும் சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story