நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் கரூர் மாணவர் முதலிடம்


நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் கரூர் மாணவர் முதலிடம்
x
தினத்தந்தி 6 Jun 2019 11:00 PM GMT (Updated: 6 Jun 2019 7:08 PM GMT)

நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் முதலிடத்தை கரூர் மாணவர் பெற்றார். மனநல மருத்துவராகி சேவை செய்வதே லட்சியம் என அவர் கூறினார்.

கரூர்,

மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 5-ம் இடத்தையும் கரூர் மாணவர் கே.கே.கார்வண்ண பிரபு பெற்றார்.

இந்த மாணவரின் தந்தை கண்ணன் டாக்டராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ்-2 படித்த இந்த மாணவர் 600-க்கு 476 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

இதுகுறித்து மாணவர் கார்வண்ணபிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு என்றாலே கடினமாக இருக்கும் என்கிற மனப்பாங்கில் அதனை எடுத்து கொள்ளக்கூடாது. சரியான முறையில் பாடங்களை படித்தால் அதில் வெற்றி உறுதி தான். அந்த வகையில் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள் கிறேன்.

நீட் தேர்வில் 720-க்கு 572 மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மனநல மருத்துவராகி மக்களுக்கு மருத்துவ சேவையாற்ற விரும்புகிறேன். நீட் தேர்வு முடிவு எதிர்பார்த்தபடி வரவில்லை என்று மாணவிகள் தற்கொலை செய்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அது போன்ற முடிவுகளுக்கு யாரும் வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story