‘முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன்’ ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேட்டி
முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்குமார் தெரிவித்தார்.
அலங்காநல்லூர்,
மதுரை பாலமேடு அருகே வலையபட்டியில் மஞ்சமலை சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.பி.ரவீந்திரநாத்குமார் நேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வலையபட்டி, சத்திரவெள்ளாளபட்டி ஆகிய இடங்களில் வாக்காளர்களை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். அப்போது ஏராளமான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து மலர்தூவி வரவேற்றனர். அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், சரவணன், மாணிக்கம் ஆகியோர் வந்திருந்தனர்.
பின்னர் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. தேனி தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் குறைபாடுகள் குறித்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காணப்படும். தமிழக விவசாயிகளின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கூறும்போது, தேனி தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது ரவீந்திரநாத் குமார் எம்.பி. உரிய நடவடிக்கை எடுப்பார். இத்தொகுதியின் வெற்றி தமிழகத்தின் அடையாளமாக தொடரும். மேலும் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய தொடர்ந்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த வெற்றியை தந்த அனைத்து கிராம மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் யூனியன் தலைவர் ராம்குமார் உள்பட கூட்டுறவு வங்கி தலைவர்கள், கட்சியின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story