பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் உக்கிரபாண்டி முன்னிலை வகித்தார். பொருளாளர் இன்பராஜா அனைவரையும் வரவேற்று பேசினார்.
பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, கடந்த 5 ஆண்டுகளாகவே பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. ஆனால் கால் நடைகளுக்கு வழங்கப்படும் தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் கறவைமாடு வளர்ப்பவர்கள் பெரும் நஷ்டத்திற்கும், கஷ்டத்திற்கும் ஆளாகி வருகின்றனர். மேலும் மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைக்கவில்லை. எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு தற்போது பசும்பாலிற்கு வழங்கப்பட்டு வரும் விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.15-ம், எருமை பாலுக்கு லிட்டருக்கு ரூ.21-ம் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் நேரடியாக ஆவினுக்கு அனுப்பப்படும் பாலின் விலைக்கும், தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களின் மூலம் அனுப்பப்படும் பாலின் விலைக்கும் முரண்பாடு உள்ளது.
இந்த முரண்பாட்டை தவிர்க்க தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களில் தானியங்கி பால் பரிசோதனை கருவி அமைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், சடையாண்டி, அன்னக்கொடி, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தபாண்டி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story