சங்கிலி பறிக்க முயன்றபோது தடுத்ததால் ஆத்திரம் கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் கணவன்-மனைவி படுகாயம் இருசக்கர வாகனத்தோடு சாலையில் விழுந்தனர்
எண்ணூர் கடற்கரை சாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிக்க முயன்றதை தடுத்ததால் ஆத்திரத்தில் கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனா (வயது 36).
கணவன்-மனைவி இருவரும் நேற்று காலை அருகில் உள்ள ஒரு வீட்டின் கிரகப்பிரவேசத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து நேராக எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மீனாவின் தந்தை நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் எண்ணூர் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
கொள்ளையனுடன் போராட்டம்
கே.வி.கே.குப்பம் அருகே சென்றபோது இவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 வாலிபர்கள், கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மீனாவின் கழுத்தில் கிடந்த 21 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர்.
உடனே சுதாரித்து கொண்ட மீனா, சங்கிலியை பறிக்கவிடாமல் கொள்ளையன் கையோடு சேர்த்து நகையையும் கெட்டியாக பிடித்துக்கொண்டு கொள்ளையனுடன் போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், கண்இமைக்கும் நேரத்தில் கணவன்-மனைவி இருவரையும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இழுத்து தள்ளிவிட்டனர். அதில் சங்கிலி 2 துண்டானது. கையில் சிக்கிய அரை பவுன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் பலத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்த கணவன்-மனைவி இருவரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எண்ணூர் கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இதேபோன்று நேற்று முன்தினம் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் அதிகாலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்த சித்ரா என்ற பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற ஹெல்மெட் கொள்ளையர்கள், அதை அவர் தடுத்ததால் ஆத்திரத்தில் சித்ராவை தரதரவென்று இழுத்து கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
வடசென்னை பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்ட பிறகு சங்கிலி பறிப்பு சம்பவம் குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் பகுதியிலேயே கொள்ளையர்கள் துணிகரமாக சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வருவது அப்பகுதி பொது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story