நெல்லையில் ஓய்வூதியம் வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நகை மோசடி
நெல்லையில் ஓய்வூதியம் வாங்கி தருவதாக கூறி, பெண்களிடம் நகை மோசடி செய்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
இது தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டத்தின்கீழ் உதவித்தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, கிராமப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டிகளை நெல்லை மாநகர பகுதிக்கு அழைத்து வருகின்றனர். பின்னர் அவர்கள், ஓய்வூதிய திட்டத்துக்கு விண்ணப்பிக்க புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அப்போது அவர்கள், புகைப்படத்தில் கழுத்து, காதில் நகைகள் அணிந்திருப்பது தெரிந்தால், ஓய்வூதியம் கிடைக்காது. எனவே புகைப்படம் எடுக்கும்போது, நகைகளை கழற்றி தங்களிடம் தருமாறு கேட்டு பெறுகிறார் கள். பின்னர் நகைகளுடன் அந்த பெண்கள் மாயமாகி விடுகின்றனர்.
நெல்லை சந்திப்பு மற்றும் பாளையங்கோட்டை பகுதியில் தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடந்துள்ளது என்று போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. எனவே பொதுமக்கள் இத்தகைய மோசடியில் ஈடுபடும் பெண்கள் குறித்த விவரம் தெரிந்தால் போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு 0462-2329043, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு 0462-2568028 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டு வரும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story