நெல்லையில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.3 கோடி மோசடி
நெல்லையில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முருகன் (வயது 37) என்பவர் தலைமையில் பலர் நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் பாஸ்கரனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், எங்களிடம் ரூ.3 கோடியை மோசடி செய்து விட்டார். அதாவது எங்களுடன் படித்த அந்த தொழில் அதிபர் நட்புடன் பழகி வந்தார். அவர் தொழில் நிறுவனங்கள் தொடங்கி இருப்பதாகவும், பங்கு சந்தையில் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டி வருவதாகவும் கூறினார். எனவே, பங்கு சந்தையில் அவர் மூலம் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.
ஒரு திட்டத்தின் கீழ் ரூ.37,500 முதலீட்டுக்கு வாரம் ரூ.1,500 வீதம் மாதத்துக்கு லாபம் மட்டும் ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார். இதே போல் பல மடங்கில் முதலீடு செய்யலாம் என்றும் அவர் கூறினார். இதை நம்பி நான் முதலீடு செய்தேன். ஒருசில மாதங்கள் மட்டும் வட்டியை தந்துவிட்டு பின்னர் மோசடி செய்து விட்டார். இதே போல் மொத்தம் 120 பேர் பணம் முதலீடு செய்து உள்ளனர். மொத்தம் ரூ.3 கோடி மோசடி செய்து எங்களை ஏமாற்றி உள்ளார்.
எனவே, எங்களை ஆசை வார்த்தை கூறி முதலீடு செய்ய வைத்து, வட்டி தருவதாக கூறி ஏமாற்றி பணம் மோசடி செய்த அந்த தொழில் அதிபர், இதற்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய தம்பி, தாய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story