தொலைக்காட்சி பெண் ஊழியரிடம் சங்கிலி பறிப்பு நடுரோட்டில் கொள்ளையர்களுடன் போராட்டம்
கோட்டை அருகே உள்ள முத்துசாமி பாலத்தில் தொலைக்காட்சி பெண் ஊழியரிடம் கொள்ளையர்கள் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.
சென்னை,
சென்னை சாத்தங்காட்டை சேர்ந்தவர் ராஜஸ்ரீ (வயது 44). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு அவர் பணியை முடித்துவிட்டு, தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கோட்டை அருகே உள்ள முத்துசாமி பாலத்தில் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவரை வழிமறித்தனர். மொபட்டில் இருந்து அவரை கீழே தள்ளினார்கள்.
அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர். ராஜஸ்ரீ அந்த கொள்ளையர்கள் 2 பேரிடமும் நடுரோட்டில் கடும் போராட்டம் நடத்தினார். அபய குரல் எழுப்பி கூச்சல் போட்டார். நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு யாரும் உதவிக்கு வரவில்லை. ராஜஸ்ரீயை அடித்து உதைத்த கொள்ளையர்கள் தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை மட்டும் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜஸ்ரீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக முதலில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு பூக்கடை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story