கேரளாவில் ‘நிபா’ காய்ச்சல்: குமரி எல்லையில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு


கேரளாவில் ‘நிபா’ காய்ச்சல்: குமரி எல்லையில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2019 4:45 AM IST (Updated: 7 Jun 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ‘நிபா’ காய்ச்சல் பரவி வரும் நிலையில் குமரி- கேரள எல்லையான களியக்காவிளையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

களியக்காவிளை,

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் கேரள எல்லையையொட்டிய தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக எல்லை பகுதிகளில் முகாம்கள் அமைத்து மருத்துவ சோதனைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் மருத்துவ சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

குமரி- கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் மேல்புறம் வட்டார மருத்துவ ஆய்வாளர் சுபஜா தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் மருத்துவ சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கேரளாவில் இருந்து பஸ், கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் வருபவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி நிபா காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன், யாருக்காவது காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளதா? என சோதனையிட்டனர்.

இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில், கேரளாவில் நிபா காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த நோய் குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கேரளாவில் இருந்து வருபவர்களிடம் நிபா காய்ச்சலுக்கான அறிகுறிகள் உள்ளதா? என சோதனையிடப்படுகிறது. அவ்வாறு அறிகுறி தென்படும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

இதற்கிடையே குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் தற்போது வவ்வால் மூலம் பரவக்கூடிய நிபா வைரஸ் என்னும் நோய் பரவி வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி உள்பட 8 மாவட்டங்களுக்கு ‘நிபா’ வைரஸ் பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. நிபா வைரசை கட்டுப்படுத்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 150 தனியார் மருத்்துவமனைகளிலும், 12 அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சல் காரணமாக வருபவர்களை தீவிரமாக பரிசோதித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருசில இடங்களில் சாதாரண காய்ச்சல், சளி, இருமல் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் விலங்குகள் கடித்த பழத்தையோ, குறிப்பாக வவ்வால் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. கைகளையும், பழங்களையும் சுத்தமாக கழுவி, பழத்தோல்களை நீக்கிவிட்டு உண்ண வேண்டும். தமிழ்நாட்டில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் எதுவும் இல்லை. கடந்த ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தை நிபா வைரஸ் தாக்கவில்லை. இந்த ஆண்டும் நிபா வைரஸ் தாக்காமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். நிபா வைரஸ் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

நாகர்கோவில் நகரில் போக்குவரத்துக்கு இடையூராக ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரில் உள்ள பல இடங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகம் காணப்படுவதால் இதனை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

Next Story