பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக 25 ‘பிங்க்’ ஜீப்கள் முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்
பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக 25 ‘பிங்க்‘ ஜீப்களின் சேவையை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெண்களின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின் கீழ் 25 ‘பிங்க்‘ (இளஞ்சிவப்பு) ஜீப்களின் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு அந்த ஜீப்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது குமாரசாமி பேசியதாவது:-
பெங்களூரு நகரில் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த ‘பிங்க்‘ ஜீப்கள் ஈடுபடும். பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த ஜீப்களுக்கு ஆகும் செலவை மத்திய-மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.56.07 கோடி நிதி வழங்கியுள்ளது. அதில் ரூ.4.30 கோடி செலவில் இந்த 25 ஜீப்கள் வாங்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி.) நிறுவன இயக்குனர் பிரசாத் பேசும்போது, “பெண்களின் பாதுகாப்புக்காக இந்த 25 ‘பிங்க்‘ ஜீப்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெண்கள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தால், அந்த ஜீப்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வரும். இந்த ஜீப்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் அந்த ஜீப்கள் எங்கு இருக்கிறது என்பது கண்காணிக்கப்படும். நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சிறிய மற்றும் பெரிய வாகனங்கள் ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 1,000 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 15 பஸ் நிலையங்களில் பெண்கள் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது“ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து மந்திரி டி.சி.தம்மண்ணா, பி.எம்.டி.சி. தலைவர் என்.ஏ.ஹாரீஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story