மும்பை - புனே இடையே அடுத்த வாரம் ‘வந்தே பாரத்' ரெயில் சோதனை ஓட்டம் ரெயில்வே வாரிய உறுப்பினர் தகவல்
மும்பை - புனே இடையே அடுத்த வாரம் ‘வந்தே பாரத்' ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கும் என ரெயில்வே வாரிய உறுப்பினர் கூறினார்.
மும்பை,
மும்பையில் ரெயில்வே வழித்தடங்களில் செய்யப்பட்ட மழைக்கால முன்எச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்து ரெயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஸ் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மும்பை - புனே, மும்பை - நாசிக், மும்பை - வதோரா இடையே ‘வந்தே பாரத்' விரைவு ரெயில் சோதனை ஓட்டத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ளோம். இதற்காக ஒரு ஏ.சி. மற்றும் ஒரு சாதாரண ரெயில் மத்திய, மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட உள்ளது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தால் மும்பை - புனே, நாசிக் பயண நேரம் 2 மணி நேரத்துக்கும் குறைவாகும்.
12 ஏ.சி. ரெயில்கள்
இதுதவிர அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மும்பையில் 12 ஏ.சி. ரெயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதில் தலா 6 ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும்.
தற்போது ரெயில்வே தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரெயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 8 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலில் டெல்லி - வாரணாசி இடையே ‘வந்தே பாரத்' ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ரெயிலால் டெல்லி - வாரணாசி பயண நேரம் 40 சதவீதம் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story