ரூ.13½ லட்சம் மோசடியில் 2 பேர் கைது: ஆன்லைன் சீட்டு விளையாட்டில் பணத்தை இழந்தது அம்பலம்


ரூ.13½ லட்சம் மோசடியில் 2 பேர் கைது: ஆன்லைன் சீட்டு விளையாட்டில் பணத்தை இழந்தது அம்பலம்
x
தினத்தந்தி 6 Jun 2019 11:31 PM GMT (Updated: 6 Jun 2019 11:31 PM GMT)

சேலத்தில் ரூ.13½ லட்சம் மோசடியில் கைதான 2 பேர் ஆன்லைன் சீட்டு விளையாட்டு மூலம் பணத்தை இழந்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சேலம்,

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன்(வயது 32), வீராணத்தை சேர்ந்த மணிவேல்(28) ஆகியோர் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பாமல் ரூ.13½ லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பாமல் மோசடி செய்ததாக தியாகராஜன், மணிவேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-

ஊழியர் தியாகராஜனுக்கு ஆன்லைனில் பணம் வைத்து சீட்டு(ரம்மி) விளையாடும் பழக்கம் இருந்தது. இதில் பணத்தை அவர் பலமுறை இழந்துள்ளார். இருந்தாலும் நண்பர்களிடம் கடன் வாங்கியும் இந்த விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் நிறுவனத்தின் பணத்தை வைத்து விளையாடலாம் என்று மணிவேலுவிடம் அவர் கூறி உள்ளார்.

இதன்படி, ஆட்டையாம்பட்டியில் உள்ள ஒரு அரசு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணத்தை நிரப்பி கணக்கு காட்டி உள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு மீண்டும் சென்று எந்திரத்தை திறந்துள்ளனர்.

இதற்கான ஓ.டி.பி. எண்ணை மணிவேல் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் ரூ.13½ லட்சத்தை எடுத்து அவர்களுடைய கணக்கில் போட்டு வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பான விசாரணையில் இந்த தகவல் அம்பலமாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story