60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவி உபகரணம் வழங்க மருத்துவ மதிப்பீட்டு முகாம்


60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவி உபகரணம் வழங்க மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x
தினத்தந்தி 8 Jun 2019 3:45 AM IST (Updated: 7 Jun 2019 7:58 PM IST)
t-max-icont-min-icon

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.

தேனி,

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில், 60 வயதிற்கு மேற்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதியோர்களுக்கு மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 11-ந்தேதி தொடங்கி, 15-ந்தேதி வரை நடக்கிறது.

11-ந்தேதி தேனி தாலுகா அலுவலகத்திலும், 12-ந்தேதி பெரியகுளம் தாலுகா அலுவலகத்திலும், 13-ந்தேதி போடி தாலுகா அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது. 14-ந்தேதி உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திலும், 15-ந்தேதி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் கலந்துகொள்ளும் 60 வயதுக்கு மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள முதியோர்களுக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், மடக்கு வாக்கர்கள், காதொலி கருவி, ஊன்றுகோல், பல்செட், மூக்கு கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

இந்த முகாமில் கலந்துகொள்ளும் பயனாளிகள் வறுமைக்கோட்டு சான்று, முதியோர் உதவித்தொகை சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story