‘மத்திய மந்திரி பதவிக்கு ஆசை இல்லை’ ஓ.ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி பேட்டி


‘மத்திய மந்திரி பதவிக்கு ஆசை இல்லை’ ஓ.ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2019 3:15 AM IST (Updated: 7 Jun 2019 8:26 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி பதவிக்கு ஆசை இல்லை என்று தேனி எம்.பி. ஓ.ப.ரவீந்திரநாத்குமார் ஆண்டிப்பட்டியில் கூறினார்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி நகருக்கு தேனி எம்.பி. ஓ.ப.ரவீந்திரநாத்குமார் வந்தார். அவரை அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். பின்னர் அவர் வைகை அணை சாலைப்பிரிவில் அமைந்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அ.தி.முக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். நான் வாக்கு சேகரிக்க சென்ற போது என்னிடம் மக்கள் கூறிய குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே எனது முதல் பணியாக இருக்கும்.

மத்திய மந்திரி பதவிக்கு நான் எப்போது ஆசைபட்டதே இல்லை. மக்களின் உறுப்பினராக இருந்து அவர்களுக்கு சேவை செய்வதையே விரும்புகிறேன். முதற்கட்டமாக எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

என்னுடைய வெற்றியை விமர்சனம் செய்ததை நான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. போடி-மதுரை அகலரெயில்பாதை திட்டம் நிறைவேற்றுவதில் எதற்காக தாமதம் ஏற்படுகிறது என்பது குறித்து நான் நேரில் சென்று ஆய்வு நடத்துவேன். மேலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் வலியுறுத்தி ரெயில்பாதை திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நீங்கள் பதவியேற்க தடைகேட்டு வழக்குதொடர போவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எனக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றார்.

இந்த பேட்டியின்போது அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடைராமர், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஏ.லோகிராஜன், ஒன்றிய துணை செயலாளர் அமரேசன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் லோயர்கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிக்குவிக் சிலைக்கு எம்.பி ரவீந்திரநாத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Story