சீராக குடிநீர் வழங்கக்கோரி திருச்செந்தூரில் பொதுமக்கள் சாலைமறியல்


சீராக குடிநீர் வழங்கக்கோரி திருச்செந்தூரில் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 8 Jun 2019 4:15 AM IST (Updated: 7 Jun 2019 8:36 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து முத்தாரம்மன் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், தங்களது பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று திருச்செந்தூர் தெற்கு ரத வீதி-மேல ரத வீதி சந்திப்பில் காலி குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

அப்போது அதிகாரிகள் கூறுகையில், தற்போது பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் முடிந்தவுடன் சீராக குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story