தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு


தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 8 Jun 2019 4:00 AM IST (Updated: 7 Jun 2019 8:55 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி, 

தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் புது கிணற்று தெருவை சேர்ந்தவர் செல்லப்பா. இவருடைய மகன் சக்தி முப்புடாதி (வயது 31). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. சம்பவத்தன்று இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்தது சக்தி முப்புடாதி என்பதும், அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story