விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் வேளாண் இணை இயக்குனர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் இணை இயக்குனர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் 2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிரையும், காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களையும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர்வாரியாக கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மற்றும் காப்பீடு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, நடப்பு ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் நெற்பயிருக்கு 714 வருவாய் கிராமங்களும், மக்காச்சோளத்துக்கு 67 கிராமங்களும், துவரைக்கு 454 கிராமங்களும், உளுந்திற்கு 30 கிராமங்களும், பச்சை பயிறுக்கு 80 கிராமங்களும், நிலக்கடலைக்கு 752 கிராமங்களும், பருத்திக்கு 147 கிராமங்களும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கேழ்வரகுவிற்கு 26 பிர்காவிலும், சோளத்துக்கு 33 பிர்காவிலும், கம்புவிற்கு 18 பிர்வாகவிலும், எள்ளுவிற்கு 1 பிர்காவிலும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இத்திட்டம் ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.
கடன் பெறாத விவசாயிகள், வேலூர் மாவட்டத்தில் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக சொர்ணவாரி நெற்பயிரையும், காரீப் பயிர்களையும் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மற்றும் காப்பீடு கட்டணம் (ஏக்கருக்கு) விவரம் வருமாறு:-
(சொர்ணவாரி) நெல் பயிர் அடுத்த மாதம் 31-ந் தேதியும், மக்காச்சோளம், சோளம், கேழ்வரகு, கம்பு, துவரை, உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களுக்கு ஆகஸ்டு 31-ந் தேதியும், பருத்தி பயிருக்கு செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நெல்-ரூ.570, மக்காச்சோளம்-ரூ.376, சோளம்-ரூ.236, கேழ்வரகு-ரூ.201, கம்பு -ரூ.221, துவரை-ரூ.315, உளுந்து-ரூ.315, பச்சைபயிறு-ரூ.315, நிலக்கடலை-ரூ.500, எள்-ரூ.220, பருத்தி-ரூ.440.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு பெற்றிட அனைத்து விவசாயிகளும் உடனடியாக பயிர் காப்பீ்டு் தொகையினை செலுத்தி பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story