ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் தாய்-குழந்தை சாவு
ஏர்வாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் தாய்-குழந்தை உயிரிழந்தனர். இதனால் பிரசவம் பார்த்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி புது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அகிலா (வயது 26). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கருவுற்ற அகிலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் மாலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருக்குறுங்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு டாக்டர்கள் பணியில் இல்லாததால், செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர்.
இதில் ஆண் குழந்தையை பிரசவித்த அகிலா சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த ஆண் குழந்தையும் உடனே இறந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்குறுங்குடி போலீசார் விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் உறவினர்கள், பொதுமக்களின் போராட்டம் விடிய, விடிய நீடித்தது. தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இல்லாத டாக்டர் மீதும், தவறான முறையில் பிரசவம் பார்த்த செவிலியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் தரப்பில், இதுபற்றி உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் அதிகாரிகள் கையெழுத்திட்டு எழுத்துப்பூர்வமாகவும் பதில் அறிக்கை அளித்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு அகிலாவின் உறவினர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அகிலா மற்றும் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அகிலா மற்றும் குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல்களை ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் அகிலா, குழந்தையின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையிலும், உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறினர்.
பின்னர் போலீஸ் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். அகிலாவின் தந்தை சுந்தர்ராஜ் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று மதியம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து உடல்களை வாங்க உறவினர்கள், அரசியல் கட்சியினர் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு மாலையில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கு செய்வதற்காக உடல்களை அவர்கள் திருக்குறுங்குடிக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story