ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரோகிணி தகவல்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர 2019-2020- ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை விடுதி அமைந்திருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர் ஆகியோரிடம் பெறலாம்.
மேலும் சேலம், ஆத்தூர், ஓமலூர் மற்றும் சங்ககிரி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களிலும், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். விண்ணப்பத்தினை முழுமையாக நிரப்பி, மாணவ, மாணவிகளின் வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தக முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் இ.எம்.எஸ். எண் ஆகியவற்றை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.
பள்ளி விடுதியில் சேர விண்ணப்பம் அளிப்பதற்கு வருகிற 25-ந் தேதி கடைசி நாளாகும். கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பம் அளிப்பதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 13-ந் தேதி கடைசி நாளாகும். விடுதியில் சேர விரும்பும் மாணவர்கள் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும், இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு விடுதியில் சேர்க்கை அனுமதிக்கப்படும். மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர்ந்து, தரமான கல்வியைப் பெற்று, வாழ்வில் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story