நெல்லையில் பரபரப்பு ஆதீனம் பதவி ஏற்பு விழாவில் திடீர் மோதல்; போலீசார் குவிப்பு
நெல்லை டவுனில் ஆதீனம் பதவி ஏற்பு விழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவில் ஸ்ரீமத் பரசமய கோளரிநாதர் ஆதீன கமிட்டி அலுவலகம் உள்ளது. இந்த ஆதீனத்துக்கு நாடு முழுவதும் சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மடத்தின் 38-வது ஆதீனமாக இருந்த சிவசண்முக நானாச்சாரியார் கடந்த ஆண்டு முக்தி அடைந்தார். அவருக்கு பதிலாக புத்தமானந்தா சரசுவதி சுவாமியை புதிய ஆதீனமாக ஒரு தரப்பினர் தேர்வு செய்தனர். அவருக்கு மானூரில் நேற்று பட்டாபிஷேகம் நடத்தினர். பின்னர் அவரது தலைமையிலான தரப்பினர் நெல்லை டவுனில் உள்ள அலுவலகத்துக்கு பதவி ஏற்க வந்தனர்.
ஆனால் மற்றொரு தரப்பினர் அவர் பதவி ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதீனத்தின் வாரிசுகளே அந்த பதவிக்கு வரவேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இருதரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது.
இதை அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அந்த அலுவலகத்தை தற்காலிகமாக பூட்டி வைத்தனர். மேலும் மாலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story