புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை; நண்பர் படுகாயம்


புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Jun 2019 4:00 AM IST (Updated: 8 Jun 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பிரபல ரவுடியை மர்மநபர்கள் ஓட, ஓட விரட்டி கொலை செய்தனர். இதை தடுக்க முயன்ற அவரது நண்பர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் என்கிற சுரே‌‌ஷ் பாண்டியன் (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது புதுக்கோட்டையில் உள்ள டவுன் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்கள் மற்றும் திருநெல்வேலி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் சுரே‌‌ஷ்பாண்டியன் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் ஆகியோர் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 6 பேர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுரே‌‌ஷ்பாண்டியனை வெட்ட பாய்ந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். மேலும் சுரே‌‌ஷ்பாண்டியன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்மநபர்கள் சுரே‌‌ஷ்பாண்டியனை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இதைக்கண்ட அவரின் நண்பர் ஆனந்த் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுரே‌‌ஷ்பாண்டியனின் தாயார் சம்பவ இடத்துக்கு வந்து சுரே‌‌ஷ்பாண்டியன் உடலை பார்த்து கதறி அழுதார். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்கோகர்ணம் போலீசார் படுகாயமடைந்த ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இறந்த சுரே‌‌ஷ்பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் படுகாயமடைந்த ஆனந்த் கொடுத்த தகவலின்படி கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக சுரே‌‌ஷ்பாண்டியன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அல்லது கொடுக்கல், வாங்கலில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. கொலை செய்யப்பட்ட சுரே‌‌ஷ்பாண்டியன் மீது கடந்த 2015-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பிரபல ரவுடியை ஓட, ஓட விரட்டி மர்மநபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story