திருச்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்துக்கு ‘சீல்’ வைப்பு?
திருச்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளி கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தொடங்கவே, கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
கட்டிடம் விரிவாக்கம் செய்யும்போது முறையாக பொதுப்பணித்துறை, மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தின் முன் அனுமதி பெற்ற பின்னரே பணியை தொடங்க முடியும். ஆனால், அந்த பள்ளி நிர்வாகம் எவ்வித அனுமதியும் பெறாமல் விரிவாக்கம் செய்து தரைத்தளம் முதல் 3 அடுக்கு மாடி கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு ‘சீல்’ வைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதையறிந்த பள்ளி நிர்வாகம், உள்ளூர் திட்டக்குழுமத்தில் கடந்த 4-ந் தேதியே விண்ணப்பித்து விட்டதாகவும் அது பரிசீலனையில் இருப்பதால் அதுவரையில் நடவடிக்கை எடுப்பதை தள்ளி வைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ‘சீல்’ வைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தள்ளி வைத்தது.
Related Tags :
Next Story