புதுவையில் பரபரப்பு ரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’ வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி
புதுவையில் ரூபாய் 100-க்கு பதில் ரூ.500 தந்த ஏ.டி.எம். மிஷினால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி மிஷன்வீதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நேற்று காலை சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ஷபீர் என்பவர் பணம் எடுக்க சென்றார். எப்போதும் போல் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் சொருகி ரூ.100 பணம் எடுக்க முயன்றார். அப்போது அந்த எந்திரத்தில் இருந்து 500 ரூபாய் நோட்டு வந்தது.
இதை பரிசோதித்துப் பார்ப்பதற்காக மீண்டும் 100 ரூபாய் எடுப்பதற்கு முயன்றார். அப்போதும் 500 ரூபாய் நோட்டு வந்தது. இதற்கும் மேலாக அவரது வங்கி கணக்கில் இருந்தும் இருப்பு பணம் குறையவில்லை.
இதனால் முகமது ஷபீர் இன்ப அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் அந்த பணத்தை வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. உடனே இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். குறிப்பிட்ட அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பணத்துக்கு பதிலாக கூடுதல் தொகை வந்த விவரம் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களும் அங்கு விரைந்து வந்தனர். அந்த ஏ.டி.எம். எந்திரத்தின் செயல்பாடு குறித்து பணம் எடுத்தனர். அவர்களுக்கும் இதேபோல் பணம் வந்தது. உடனே அந்த ஏ.டி.எம். மையத்தை இழுத்து மூடினர். அந்த எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இதுபோல் பணம் வந்ததாகவும், அதை சரி செய்த பிறகு மீண்டும் அந்த மையம் திறக்கப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ஏ.டி.எம். குறித்து அறிந்து அதை வேடிக்கை பார்க்க அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story