கட்சியை பலப்படுத்தும் சக்தி எனக்கு இருக்கிறது தேர்தல் தோல்வியால் ஓய்ந்துவிட மாட்டேன் தேவேகவுடா பேச்சு


கட்சியை பலப்படுத்தும் சக்தி எனக்கு இருக்கிறது தேர்தல் தோல்வியால் ஓய்ந்துவிட மாட்டேன் தேவேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 8 Jun 2019 3:27 AM IST (Updated: 8 Jun 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ஓய்ந்து விடமாட்டேன் என்றும், கட்சியை பலப்படுத்தும் சக்தி எனக்கு இருக்கிறது என்றும் தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடைபெற்ற 61 நகர உள்ளாட்சி அமைப்புகளில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து யாரும் கவலைப்பட தேவை இல்லை. கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் அனைவரும் சேர்ந்து செயலாற்ற வேண்டும். கட்சியை பலப்படுத்த எச்.விஸ்வநாத்தின் சேவை தேவைப்படுகிறது. அதனால் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த வேண்டும். அதற்கு முதல்-மந்திரி செயல்படுத்தி வரும் ஏழைகளுக்கு ஆதரவான திட்டங்கள், விவசாய கடன் தள்ளுபடி போன்றவை குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

பா.ஜனதா வெற்றி

கூட்டணி அரசு மீது யாருக்கும் அவநம்பிக்கை வேண்டாம். இந்த அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். உள்ளூர் அளவில் கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்றலாம். நாடாளுமன்ற தேர்தலில் 303 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது, மோடியின் சாணக்கியத்தனம் என்று சொல்ல மாட்டேன். மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர் என்று மட்டுமே சொல்வேன்.

நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது, ஊடகங்களுக்கு பிடிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு தலா ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா 2-வது இடமும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 3-வது இடமும் கிடைத்துள்ளது.

ஓய்ந்துவிட மாட்டேன்

எனது உடல்நிலை சரியில்லை. ஆனாலும் இங்கு வந்துள்ளேன். கட்சியின் நிலையை சரிசெய்வது எனது வேலை. தோல்வியை சவாலாக ஏற்றுக் கொண்டுள்ளேன். கட்சியை பலப்படுத்த வயது முக்கியமல்ல. நான் தோல்வி அடைந்ததால் ஓய்ந்துவிட மாட்டேன். கட்சியை பலப்படுத்தும் சக்தி இன்னும் என்னிடம் உள்ளது. தொடக்கத்தில் இருந்து முதல்-மந்திரி குமாரசாமிக்கு எவ்வளவு தொல்லை கொடுக்கிறார்கள். ரெயிலில் படுத்துக் கொண்டே டெல்லிக்கு சென்றேன். விவசாயிகளை நான் எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை.

சிலர் பச்சை துண்டை போட்டுக் கொண்டு சுற்றுகிறார்கள். நமது கட்சியில் இருந்து தின்றுவிட்டு சென்றவர்கள், நமக்கு உபதேசம் சொல்கிறார்கள். கட்சியை பலப்படுத்துவது எனது பொறுப்பு. எல்லா சமூகங்களுக்கும் ரூ.15 கோடி நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு நிதி ஒதுக்கினால், நமது கட்சி எப்படி வளராமல் போய்விடும் என்பதை பார்க்கிறேன். சட்டசபை தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று நிகில் குமாரசாமி கூறவில்லை. கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் அவ்வாறு பேசினார்.

மந்திரிசபையில் வாய்ப்பு

இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். நாட்டில் 17 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது. ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரசுக்கு ஒரு இடம் தான் கிடைத்தது என்று அக்கட்சியினர் பேசுகிறார்கள். தோல்வி பற்றி ஆலோசனை நடத்தட்டும். ஒக்கலிகர்கள் அநீதி இழைத்தார்களா அல்லது விஜயாப்புராவில் அநீதி இழைத்தது யார் என்பது தெரியும். லிங்காயத் சமூகத்திற்கு நான் கொடுத்த அளவுக்கு வாய்ப்புகள் வேறு யாரும் வழங்கவில்லை. மந்திரிசபையில் வாய்ப்பு வழங்கியுள்ளேன்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் போட்டியிட்ட தேவேகவுடா, பா.ஜனதா வேட்பாளர் பசவராஜிடம் தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story