உதான் திட்டத்தின் கீழ் மைசூரு-பெங்களூரு இடையே விமான சேவை தொடக்கம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார்
உதான் திட்டத்தின் கீழ் மைசூரு-பெங்களூரு இடையே விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. இதனை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார்.
மைசூரு,
கர்நாடகத்தின் அரண்மனை நகரம் என்ற பெயர் பெற்றது, மைசூரு. மைசூருவில் அரண்மனைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்கா உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் சுற்றுலா தலங்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பஸ் மற்றும் ரெயில் மூலமாக தான் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. இதற்கிடையே மைசூரு மண்டஹள்ளியில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் மைசூரு- பெங்களூரு இடையே விமான சேவை தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இதனால் மைசூரு-பெங்களூரு இடையே விமான சேவை தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் நேற்று மைசூரு-பெங்களூரு இடையே விமான சேவை தொடக்க விழா நடந்தது.
மந்திரி ஜி.டி.தேவேகவுடா
இதில் மாநில உயர்கல்வித் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா கலந்துகொண்டு கொடி அசைத்து விமான சேவையை மதியம் 12 மணிக்கு தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா துறை மந்திரி சா.ரா.மகேஷ், மைசூரு-குடகு எம்.பி. பிரதாப் சிம்ஹா, மைசூரு மேயர் புஷ்பலதா ஜெகன்நாத், ராமதாஸ் எம்.எல்.ஏ., விமான நிலைய ஆணையர் மஞ்சுநாத், மைசூரு மாநகராட்சி கமிஷனர் ஷில்பா நாகு, போலீஸ் கமிஷனர் கே.டி.பாலகிருஷ்ணா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித் சிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், மந்திரி ஜி.டி. தேவேகவுடா பேசியதாவது:-
பொதுமக்களுக்கு அனுகூலம் ஆகும் வகையில் மற்றும் மைசூரு-பெங்களூரு இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஏர்வேஸ் விமானம் மட்டும் இயக்கப்படுகிறது. தினமும் காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மைசூருவுக்கு பகல் 11.55 மணிக்கு வந்து சேரும். அதுபோல் மைசூருவில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூருவுக்கு மதியம் ஒரு மணிக்கு சென்றடையும்.
நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பெயர்
வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் மைசூருவில் இருந்து கேரள மாநிலம் கொச்சி, மற்றும் கோவா நகரங்களுக்கு மற்றொரு விமான சேவை தொடங்கப்படும். அதுமட்டுமில்லாமல் மைசூரு-ஐதராபாத் இடையேயும் விமான சேவை தொடங்கப்படும். அதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலதிபர்களை கவரும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
மைசூரு விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கத்திற்கு 250 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலத்தை கையகப்படுத்த அரசு தயார் நிலையில் உள்ளது. இதற்கு ரூ.700 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மைசூரு மண்டஹள்ளி விமான நிலையம் மேம்பாடு செய்யப்படும்.
மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்திற்கு, மறைந்த மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேசி நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
72 இருக்கைகள்
இதைதொடர்ந்து பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசுகையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் மைசூரு-பெங்களூரு இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. 72 இருக்கைகள் கொண்ட ஏர்வேஸ் விமானம் இயக்கப்படுகிறது. ஒரு பயணிக்கு ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது தொடங்கியுள்ள விமான சேவையால் பொதுமக்கள் மைசூருவில் இருந்து 50 நிமிடத்தில் பெங்களூருவை சென்றடைய முடியும் என்றார்.
நேற்று மைசூருவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 35 பயணிகள் பெங்களூருவுக்கு பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story