ஆட்சியை நடத்த முடியாவிட்டால் வெளியேறுங்கள் கர்நாடக சட்டசபைக்கு தற்போது தேர்தல் வராது எடியூரப்பா பரபரப்பு பேட்டி
கர்நாடக சட்டசபைக்கு எக்காரணம் கொண்டும் தற்போது தேர்தல் வராது என்றும், ஆட்சியை நடத்த முடியாவிட்டால் வெளியேறுங்கள் என்றும் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும்படி ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நிகில் குமாரசாமி பேசியுள்ளார். எக்காரணம் கொண்டும் கர்நாடக சட்டசபைக்கு தற்போது தேர்தல் வராது. சட்டசபை தேர்தல் முடிந்து ஓராண்டு தான் ஆகிறது. எங்கள் கட்சிக்கு 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியால் ஆட்சியை நடத்த முடியாவிட்டால், விட்டுவிட்டு வெளியேற வேண்டும். நாங்கள் ஆட்சி செய்வோம்.
நம்பிக்கை இல்லை
தேர்தலை சந்திக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம். 5 ஆண்டுகளுக்கு பிறகே தேர்தலை சந்திப்போம். இந்த அரசு நீண்ட காலம் நீடிக்கும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை. கிராம தரிசன திட்டத்தை தொடங்குவதாக குமாரசாமி கூறியுள்ளார். முன்பு அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, இந்த திட்டத்தை அமல்படுத்தினார். அதனால் என்ன பயன் கிடைத்தது.
அவர் தங்கிய கிராமங்களின் வளர்ச்சிக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக கூறினார். ஆனால் நிதியை அவர் ஒதுக்கவில்லை. அந்த கிராமங்களின் இன்றைய நிலை என்ன?. கிராம தரிசனத்திற்கு பதிலாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி ஆய்வு செய்ய வேண்டும். அங்கு நிலவும் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிகப்பெரிய போராட்டம்
இன்றைய சூழ்நிலையில் கிராம தரிசனம் தேவையா?. இதை மக்கள் விரும்ப மாட்டார்கள். முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே குமாரசாமி இந்த கிராம தரிசன திட்டத்தை தொடங்குகிறார். ஜிந்தால் நிறுவனத்திற்கு இந்த அரசு குறைந்த விலைக்கு 3,667 ஏக்கர் நிலத்தை கிரய பத்திரம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது. இதில் குமாரசாமி ஏதோ முறைகேடு செய்துள்ளார். இதற்கு எதிராக பா.ஜனதா சார்பில் வருகிற 13-ந் தேதி முதல் 3 நாட்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
சட்டசபையை கலைத்துவிட்டு...
எடியூரப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பதும், தற்போது சட்டசபைக்கு தேர்தல் வராது என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story