கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மிதவை கப்பல்கள் மூலம் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மிதவை கப்பல்கள் மூலம் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்,
மும்பையில் கடல் வழியாக ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோல் மீண்டும் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதை தடுக்க கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்திய கடலோர காவல்படை, கப்பல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கடற்கரை பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து செல்வதற்காக நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய மிதவை கப்பல்கள் (ஹோவர் கிராப்ட்–190, ஹோவர் கிராப்ட்–197) மூலம் சென்னை முதல் ராமேஸ்வரம் வரையுள்ள கடற்கரையோர பகுதிகளை அவ்வப்போது ரோந்து சென்று தீவிரவாதிகள் ஊடுருவி வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து 2 மிதவை கப்பல்கள் மூலம் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்துப்பணியாக சென்னை நோக்கி புறப்பட்டு வந்தனர். மிதவை கப்பலில் தலா 10 பேர் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். அதில் ஒரு பெண் அதிகாரியும் உடன் வந்தார்.
அவர்கள் நேற்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடலுக்கு வந்தனர். அங்கு கடலிலும், நிலத்திலும் கப்பல்களில் சென்ற பார்வையிட்டனர். கடலோர காவல் படையினரை கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்–இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து கடலோர பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மிதவை கப்பல்கள் மூலம் கடல் வழியாக கடலூரில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்றனர்.