ஈரோட்டில் பரபரப்பு: ரூ.25 லட்சம் கடன் கொடுத்தவரை கத்தியால் குத்தி காரில் கடத்தல்
ஈரோட்டில், ரூ.25 லட்சம் கடன் கொடுத்தவரை கத்தியால் குத்தி காரில் கடத்திய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு ரகுபதிநாயக்கன்பாளையம் ரெயின்போ காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வது 44). இவர் வாய்க்கால்மேடு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் ஈரோட்டை சேர்ந்த வீரமணி என்பர் ரூ.25 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரமணி, ஈரோடு ரெயில் நிலையம் அருகில் வந்தால் தான் வாங்கிய கடனை திருப்பி தருவதாக தமிழ்செல்வனிடம் கூறி உள்ளார். இதனால் தமிழ்செல்வன் ஈரோடு ரெயில் நிலையம் அருகில் சென்றுள்ளார்.
அப்போது வீரமணி தன்னுடைய நண்பர் செந்தில் உள்பட 10 பேருடன் சேர்ந்து, கொடுத்த பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுக்கிறாயே என்று கூறி தமிழ்செல்வனை கத்தியால் குத்தி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
பின்னர் அந்த கும்பல் தமிழ்செல்வனை ஒரு காரில் கடத்தி ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு பகுதிக்கு கொண்டு சென்று சரமாரியாக தாக்கி உள்ளது. அப்போது தமிழ்செல்வன் அவர்களிடம் இருந்து தப்பித்து ஈரோடு வந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணி, செந்தில் உள்பட 10 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.