இளையான்குடி பகுதியில் குடிநீரை தேடி காலி குடங்களுடன் அலையும் கிராம மக்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இளையான்குடி பகுதியில் குடிநீருக்காக காலி குடங்களுடன் கிராம மக்கள் அலையும் ஏற்பட்டுள்ளது.
இளையான்குடி,
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் எப்போதும் வறட்சி மாவட்டமாக இருந்து வருகிறது. இந்த 2 மாவட்டங்களில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழையானது நன்கு பெய்தால் மட்டும் இந்த பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். இது தவிர இந்த மாவட்டங்களில் நிலவும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு சிவகங்கை மாவட்டம் வழியாக பெரிய குழாய்களில் சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவடைகிறது. இதனால் சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில் கோடைக்காலங்களில் ஓரளவு குடிதண்ணீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கூட்டுக் குடிநீர் செல்லாத கிராமங்களில் தற்போது கடும் குடிதண்ணீர் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இளையான்குடி பகுதியில் போதிய மழை பெய்யாததால் விளைநிலங்கள் எல்லாம் தரிசு நிலங்களாகவே காட்சியளிக்கிறது. இதுதவிர இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இளையான்குடி மற்றும் அதன் அருகே உள்ள சூராணம், ஆக்கவயல் ஊராட்சிக்கு உட்பட்ட நானாமடை, சொக்கப்படப்பு, உதனூர் கிராமங்களில் கடந்த சில வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தண்ணீரை தேடி காலி குடங்களுடன் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இன்னும் சிலர் காலி குடங்களுடன் குடிநீர் குழாய் அருகே எப்போது தண்ணீர் வரும் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க லாரி மற்றும் டிராக்டரில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை ஒரு குடம் ரூ.10 என விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து நானாமடை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் கூறும்போது, இந்த பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிதண்ணீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைந்து வருகின்றனர். இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.