மாவட்டத்தில் மணல் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல் 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்தியதாக லாரிகள் உள்ளிட்ட 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுதுரை, கண்ணன் மற்றும் போலீசார் நெடுங்கல் மற்றும் சாந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார்சைக்கிள் ஒன்றில் 5 மூட்டைகளுடன் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் மூட்டை மற்றும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டையை சோதனை செய்தனர். தப்பி ஓடிய அந்த நபர் மோட்டார்சைக்கிள் மூலம் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே போல சாந்தபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு டிராக்டர் வந்தது. போலீசார் டிராக்டரை நிறுத்த முயன்ற போது டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு ஓடினார். இதையடுத்து போலீசார் டிராக்டரை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்காரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் தீர்த்தபதி வலசை ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணலை கடத்தியதாக நரசம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மைக்கேல்ராஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் மரக்கட்டா பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மணலை கடத்தியதாக தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தனப்பள்ளி போலீசார் வரகானப்பள்ளி கிராமம் தாவரக்கரை ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது அதில் ஒன்றரை யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மணலை கடத்தியதாக அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் செந்தில் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் மணல் கடத்தியதாக லாரிகள் உள்ளிட்ட 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story