மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை 3,469 பேர் எழுதினர்


மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை 3,469 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:15 PM GMT (Updated: 8 Jun 2019 3:04 PM GMT)

தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் தேர்வை 3,469 பேர் எழுதினர். 442 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேனி,

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

அதன்படி முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத மொத்தம் 3,911 பேர் அனுமதி பெற்று இருந்தனர். முதல் தாள் தேர்வுக்காக மொத்தம் 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் ஒரு மையமும், தேனி கல்வி மாவட்டத்தில் 5 மையங்களும், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 3 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் மொத்தம் 3,469 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 442 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு அறைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்பு குழுவினர் தேர்வு மையங்களில் சோதனைகள் நடத்தினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்காக மொத்தம் 21 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மொத்தம் 8,470 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Next Story