கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பன்னீர் திராட்சை விலை கிடு,கிடு உயர்வு கிலோ ரூ.100-க்கு விற்பனை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பன்னீர் திராட்சை விலை கிடு,கிடு உயர்வு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனைசெய்யப்படுகிறது.
உத்தமபாளையம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஆனைமலையன்பட்டியில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிலேயே ஆண்டு தோறும் திராட்சைபழம் கிடைக்கும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது. இங்கு விளையும் பன்னீர் திராட்சை மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதுதவிர கேரளமாநிலத்திற்கும் அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
தற்போது கோடைகாலம் முடிவடைந்த நிலையிலும் வெயிலின்தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் திராட்சை பழம் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ திராட்சை ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது இந்த பகுதியில் திராட்சைபழம் வரத்து குறைவால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. முன்பு எப்போதும் இல்லாதவகையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு கிலோ பன்னீர் திராட்சை ரூ.95 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திராட்சை விவசாயி ஒருவர் கூறும்போது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இதுவரை விற்பனை செய்யப்படாத அளவிற்கு ஒரு கிலோ பன்னீர் திராட்சை ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெப்ப காலங்களில் திராட்சை கொடியில் உள்ள பிஞ்சுகள் தானாக உதிர்ந்து விடும். இதன் காரணமாக திராட்சை விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. விலை உயர்வு ஏற்பட்ட போதிலும் திராட்சை விளைச்சல் குறைந்து போனது விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் என்றார்.
Related Tags :
Next Story