மாவட்டம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளை 11,481 பேர் எழுதினர்


மாவட்டம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளை 11,481 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:15 PM GMT (Updated: 8 Jun 2019 4:58 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 37 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளை 11 ஆயிரத்து 481 பேர் எழுதினர். 1,106 பேர் எழுதவில்லை.

வேலூர், 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 12 ஆயிரத்து 587 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா. அரசு பெண்கள் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 37 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

இதையொட்டி தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் 8.30 மணி முதல் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது.

ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் எழுத விண்ணப்பித்தவர்களில் 11 ஆயிரத்து 481 பேர் தேர்வு எழுதினர். 1,106 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். தேர்வைக் கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 1,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையத்தில் ஆய்வு செய்து தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா? என்பது குறித்து கண்காணித்தனர்.

தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் வேலூர் மாவட்டத்தில் 62 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தத் தேர்வை எழுத 21,720 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Next Story