6 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய வேளாண்மை அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.
அடுக்கம்பாறை,
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் வேளாண்மை இணை இயக்குனர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிரிதர்சிங், இணை இயக்குனர் தீட்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுஜாதா வரவேற்றார். இதில் மொத்தம் மற்றும் சில்லரை உர விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது:-
படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகளுக்கு அடுத்தபடியாக விவசாயிகளை நாடி செல்வது உர விற்பனையாளர்கள் மட்டுமே.
கடந்த ஜனவரி மாதத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய ஒன்றியங்களில் படைப்புழு தாக்குதலால் சுமார் 195 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் பாதித்தது. தற்போது மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மக்காச்சோளம் பயிர் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு 6 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கைவினை முறைகள், கோடை உழவு, ஊடுபயிர் சாகுபடி, விளக்குபொறி அமைத்தல் ஆகிய 4 முறைகளை கையாளலாம். மேலும் உயிரியல் முறை, பயிர் பாதுகாப்பு முறை ஆகியவை மூலமும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
Related Tags :
Next Story