திருவண்ணாமலையில் ரூ.28 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவு


திருவண்ணாமலையில் ரூ.28 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 9 Jun 2019 4:45 AM IST (Updated: 8 Jun 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரூ.28 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தங்கும் விடுதி கட்டப்படும் என்று கடந்த 2014-15-ம் ஆண்டிற்கான சட்டப் பேரவை கூட்டத்தொடரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.28 கோடி மதிப்பில் யாத்ரி நிவாஸ் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த யாத்ரி நிவாஸ் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய லிங்கம் கோவில் அருகில் கட்டப்பட்டு வருகிறது. இதில் காட்டேஜ் பிளாக்கில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2-ம் தளம் என 3 தளங்களாக அமைந்து உள்ளது.

தளம் ஒன்றுக்கு 8 காட்டேஜ்கள் வீதம் 96 நபர்கள் தங்கும் வகையில் 24 காட்டேஜ்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று ஓட்டல் பிளாக்கில் 3 தளங்களில் 124 நபர்கள் தங்கும் வகையில் 63 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. டார்மிட்டரி பிளாக்கானது 3 தளங்களில் 210 நபர்கள் தங்கும் வகையில் 36 அறைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் 3 பிளாக்குகளையும் சேர்த்து 123 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 430 நபர்கள் தங்க இயலும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் இதில் குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் குளிர்சாதன வசதியில்லாத அறைகள், டார்மிட்டரிகள் மற்றும் குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களின் வசதிக்காக பிளாக் ஒன்றுக்கு தலா 2 மின்தூக்கிகளும் (லிப்ட்) அமைக்கப்பட உள்ளது. மேலும் தனியாக உணவு விடுதியும், ஓட்டுனர்கள் தங்குவதற்கான பகுதியும் மற்றும் துணிகளை சலவை செய்வதற்கான பகுதியும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த யாத்ரி நிவாஸ் கட்டுமான பணியானது 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் யாத்ரி நிவாஸ் கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், முதன்மை செயலாளருமான பனிந்தர்ரெட்டி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் யாத்ரி நிவாஸ் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆணாய் பிறந்தான் கிராமத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் அருகில் உள்ள இடத்தில் அருளாளர் அருணகிரிநாதர் பெருமானுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.28 கோடி மதிப்பில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் அவதரித்த அருளாளர் அருணகிரிநாதர் பெருமானுக்கு மணிமண்டபம் கட்ட கோவில் இடம் ஒன்றினை அளிக்கக்கோரி அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை எனும் அமைப்பினர் விண்ணப்பித்ததை தொடர்ந்து இந்த இடத்தில் ரூ.75½ லட்சம் மதிப்பீட்டில் அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை அமைப்பினரால் உபயமாக மணிமண்டபம் கட்டப்பட்டு கோவில் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து கருத்துருக்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எந்த திட்டமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, தாசில்தார் மனோகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப் பணித்துறையினர் உள்பட பல்வேறு துறையினர் உடனிருந்தனர்.

Next Story